அரசியலில் மகளிர்

தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 25 பெண் வேட்பாளர்களைப் பற்றிய குறிப்புகளும் பேட்டிகளும்
Published on

கோவை தெற்கு (பாஜக) - வானதி சீனிவாசன்

தமிழக பாஜகவின் தலைமை பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் வானதி சீனிவாசன்.  இன்னமும் அதற்கான வாய்ப்புகள் உண்டு. வழக்கறிஞர் என்பதால் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக தரப்பின் ‘பாயிண்டு’களை அமைதியாக எடுத்து வைப்பார். அப்போது எதிரில் இருப்பவர் மாற்றுக் கருத்து சொல்ல சற்றே சிந்திக்க வேண்டியிருக்கும். எனவே பாஜகவில் இவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு 6 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார். சட்டப் பேரவைத் தேர்தலில் தன் சொந்த ஊரான கோவையில் களமிறங்கியிருக்கிறார். வெற்றிக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். கோவையில் பாஜகவின் செல்வாக்கு  இவருக்கு நன்றாகக் கைகொடுக்கும் என்றே கணிப்புகள் சொல்கின்றன.

“தொகுதியில்  அடிப்படை கட்டமைப்பு பணிகளே முழுமையாக வந்தடையவில்லை. அதை முன்வைத்துதான் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லும் வானதி நவீன பிரச்சார முறைகளைப் பின்பற்றி சமூக ஊடகங்களிலும் மின்னுகிறார். மக்களவைத் தேர்தலில் பாஜக இந்தத் தொகுதியில் அதிகம் வாக்குகளைப் பெற்று பிறகட்சிகளை பின்னுக்குத் தள்ளியது தனது வெற்றி வாய்ப்பைக் கூட்டும் என நம்புகிறார் வானதி.

ஆர்.கே. நகர். தொகுதி (விசிக) : வசந்தி தேவி

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணி களமிறக்கியிருக்கும் வசந்தி தேவி மிகுந்த கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு வேட்பாளர். நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் முன்னாள்  துணைவேந்தர், மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தவர். இந்த நியமனங்கள் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் தரப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு. சிறந்த கல்வியாளராக அறியப்பட்ட வசந்தி தேவியின் அரசியல் பிரவேசம் ஏன் நிகழ்ந்தது?

“தேர்தல் களமே ஜனநாயகத்தின் அடித்தளம். இதுவரை என்னைப் போன்றவர்கள் எதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அதற்காகத்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.  புதிய அரசியல் அறம், கலாச்சாரம் ஒன்று  தொடக்கி வைக்கப்பட்டிருக்கிறது” என்கிற வசந்தி தேவிக்கு அரசியல் பின்னணி உண்டு. இவருடைய  தாத்தா சர்க்கரைச் செட்டியார் காங்கிரஸிலிருந்து விலகி நீதிக்கட்சியில் இணைந்தவர். கல்வியாளராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்பட்ட வசந்தி தேவி, தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்புக்குரியதாக பலரும் பாராட்டுகிறார்கள்.

“இதுவரை தமிழக கட்சிகளால் தேசிய கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இது என்னையே மேம்படுத்துகிற விஷயமாக இருக்கும். வெற்றி வாய்ப்பு என்பதைக் கடந்து புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது” என்கிறார் உற்சாகத்துடன்.

அண்ணாநகர் (மதிமுக) : மல்லிகா தயாளன்

மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானபோது, வைகோ போட்டி என்ற அறிவிப்புக்கு அடுத்து, சென்னை வெள்ளத்தின் போது சேற்றில் இறங்கி குப்பைகளை அகற்றிய மல்லிகா தயாளனின் படங்கள் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவின.  அண்ணாநகர் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் மல்லிகா, அந்தத் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

“அண்ணாநகர் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியா என்றுதான் ஒரு தோற்றம் இருக்கிறது. சென்னை வெள்ளத்தின்போது, பணக்காரர்களும் பாதிக்கப்பட்டார்கள், ஏழைகளும் பாதிக்கப்பட்டார்கள். அதிமுக-திமுக கட்சிகள் அண்ணாநகர் மக்களுக்காக களத்தில் இறங்கி உதவிகளைச் செய்யவில்லை. குறிப்பாக, கூவம் கரையோரம் வசித்த அண்ணாநகர்வாசிகள்  கடுமையான பாதிப்புக்கு உள்ளானபோது, நாங்கள் மதிமுக சார்பாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளிலும் நிவாரணம் வழங்குவதிலும் ஈடுபட்டோம். சமூக வலைத்தளங்களில் வைரலான படம் அப்போது எடுக்கப்பட்டதுதான்” என ஆரம்பிக்கிற மல்லிகா தயாளன் அரசியலுக்கு வந்தது எப்படி?

“93-ஆம் ஆண்டு தலைவர் மதிமுக-வைத் தொடங்கியபோது கட்சியில் இணைந்தேன். வேறு எந்தக் கட்சியிலும் முன்பு இருந்தது கிடையாது. தமிழர்களின் உரிமைகளுக்காகவும் ஈழத்துக்காகவும் பார்லிமெண்டில் முழங்கிய தலைவரின் பேச்சின் பால் ஈர்க்கப்பட்டே அரசியலுக்கு வந்தேன்.”என்கிற மல்லிகா, 2001-ஆம் ஆண்டு மதிமுக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து தேர்தலை சந்தித்தபோது ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டார். அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுப்பதை அடிப்படையாக வைத்து செயல்படுகிறார் மல்லிகா.

மடத்துக்குளம் (தமாகா) : ஏ. எஸ். மகேஸ்வரி

தமிழ் மாநில காங்கிரஸின் மகளிரணித் தலைவரான ஏ.எஸ்.மகேஸ்வரி, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர். அப்பா காங்கிரஸ்காரர். விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். மாமனார் காங்கிரஸ் பிரதிநிதியாக கோவை நகரில் பதவி வகித்தவர். இந்த அடித்தளம் இருந்ததால் தான் இந்திரா காந்தியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்ததாகச் சொல்கிறார் மகேஸ்வரி.

“1986-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தேன்.  கல்லூரி நாட்களிலும் திருமணத்திற்குப் பிறகும் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். கட்சியில் சட்டப் பிரிவு தலைவராகவும் கோவை மாட்ட துணைத் தலைவராகவும் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தேன்.

காங்கிரஸிலிருந்து 2014-ஆம் ஆண்டு தமாகா பிரிந்து வந்த போது, நானும் விலகினேன். தற்போது தமாகா மகளிரணித் தலைவராக இருக்கிறேன்” என்கிற மகேஸ்வரி, கோவை மேற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக 2001-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

“எம் எல் ஏவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளில் நான் எப்போதும் விலகி இருந்ததில்லை. மக்களோடு மக்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்” என்கிற மகேஸ்வரி தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகச் சொல்கிறார்.

“திமுக, அதிமுகவுக்கு மாற்றைத் தேடிக் கொண்டிருந்த மக்களுக்கு தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி புதிய வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தத் தலைவர்கள் களங்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். மக்களின் வரவேற்பு மாற்றத்தை உண்டாக்கும்” என்கிறார் மகேஸ்வரி.

அம்பாசமுத்திரம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) : கற்பகம்

கம்யூனிஸ்ட் குடும்ப பின்னணியில் வந்த கற்பகம், சிறு வயதில் இருந்தே கட்சி பணிகளில் ஆர்வம் காட்டி வந்தவர். பிளஸ் டூ வரை படித்த இவர், 20 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வருகிறார். தற்போது முழு நேர கட்சி ஊழியர். மற்ற கட்சிகளில் கட்சிக்காரர்களுக்கு சம்பளம் எல்லாம் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டும் அவர்களை ஊழியர்களாக மதிப்பிட்டு சம்பளம் வழங்குவார்கள். எம் எல் ஏ, எம்.பிகூட அவர்களுக்கு அரசு தரும் ஊதியத்தைக் கொடுத்துவிட்டு, கட்சி தரும் ஊதியத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அம்பாசமுத்திரம் வேட்பாளர் கற்பகம் வாங்கும் சம்பளம் 4500 ரூபாய். வசிப்பது வாடகை வீட்டில். கணவர் விவசாய தொழிலாளி.

“கடந்த 20 வருடமாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன். 15க்கும் மேற்பட்ட முறை கைதாகியிருக்கிறேன்.  பெண் உரிமை சார்ந்தும் மக்களின் அடிப்படை தேவைகளை பெற்றுத்தருவதை முன்வைத்தும் போராடியிருக்கிறேன். கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகைப் பெற்றுத்தருவது, முதியோருக்கு ஓய்வூதியம் பெற்றுத் தருவது என ஏராளமான பணிகளைச் செய்திருக்கிறேன்” என்கிறார் கற்பகம். மூன்றுமுறை ஒன்றியக் குழு செயலாளராக இருக்கும் ஒரே பெண் என்கிற பெருமைக்குரியவர்.

“அதிமுக, திமுக பணமுதலைகளுக்கு மத்தியில் போட்டியிடுகிறேன். திமுக வேட்பாளர்  எளிதில் அணுக முடியாதவர், அவர் மீது அதிருப்தியோடு திமுகவினர் இருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர் என்கிற கோபம் மக்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு மாற்றாக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் எங்கள் கூட்டணி இருக்கிறது. வெற்றிக்கான வாய்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது” என்கிறார் கற்பகம்.

தி. நகர் (திமுக) : டாக்டர் கனிமொழி

மகப்பேறு மருத்துவராக அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் கனிமொழியின் திராவிடப் பாரம்பரியம் அவருடைய தாத்தா காலத்தில் தொடங்குகிறது. இவருடைய தாத்தா என்.வி.நடராஜன் திமுகவை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர். பின் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தவர். அவரது மகனான என்.வி.என். சோமுவை நினைவிருக்கிறதா? மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்தார். ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.  அவருடைய மகள்தான் டாக்டர் கனிமொழி. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாதவரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். திமுகவின் மருத்துவர் அணியின் செயலாளராக இருக்கிறார். அண்மையில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது நிறைய மருத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு சேவை புரிந்திருக்கிறார். தான் வெல்வது உறுதி என்கிறார் கனிமொழி. “திமுகவின் தேர்தல் அறிக்கை இம்முறை மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பூரண மதுவிலக்கு, கல்விக்கடன் ரத்து, வளர்ச்சித்திட்டங்கள், தி.நகருக்கேற்ற அடுக்கு மாடி கார் பார்க்கிங் வசதி என்று எல்லாமே எங்கள் தொகுதி மக்களை கவர்ந்திருக்கின்றன. எனவே என் வெற்றி நிச்சயம்” என்கிறார் கனிமொழி.

கெங்கவல்லி(திமுக) : ரேகா ப்ரியதர்ஷினி

சேலத்தை அடுத்த கெங்கவல்லியில் திமுக சார்பில் நிற்கிறார் சேலம் நகரின் முன்னாள் மேயரான ரேகா பிரியதர்ஷினி.  இவர் சேலம் நகரப் பகுதியைச் சார்ந்தவர். கெங்கவல்லி இருப்பதோ மாவட்டத்தின் எல்லையில். ஆகவே உள்ளூர் திமுகவினர் இவரை ஏற்க மறுத்து வேட்பாளரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் சமாதானமாகி இவரே வேட்பாளராகத் தொடர்கிறார். தமிழகத்தின் வேறு சில தொகுதிகளில் திமுகவினரின் கலகக் குரலுக்கு இணங்கி தலைமை வேட்பாளரை மாற்றியிருக்கையில் இங்கு மட்டும் ரேகா தப்பித்திருக்கிறார். தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறுகிறார் ரேகா. “நான் தான் இங்கு திமுக சார்பில் நிற்கும் முதல் பெண் வேட்பாளர்” என்கிறார். சேலத்தின் முதல் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவரான ரேகா, 2006-ல் மேயர் ஆனபோது அவருக்கு வயது 24 தான் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் தேர்தல் அறிக்கையும் மு.க. ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பிரச்சாரப் பயணமும் தனக்கு நிச்சயம் வெற்றி தேடித் தரும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ரேகா தனக்கெதிராக நிற்கும் வேட்பாளர்களையும் சாடுகிறார். அதிமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை தோற்றுவித்திருக்கும் நிலையில் ஆளுங்கட்சி அதிருப்தி வாக்குகள் தனக்கே விழும் என்கிறார். ”தற்போதைய  சட்டமன்ற உறுப்பினரான தேமுதிகவின் வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பிருக்கிறது. ஆகவே நான் வெல்வது உறுதி” என்கிறார்.

தஞ்சாவூர் (திமுக) : டாக்டர் அஞ்சுகம் பூபதி

திமுகவின் சார்பில் இன்னொரு மருத்துவர். பெரியாரிய குடும்பத்தில் வந்த அஞ்சுகம் பூபதி 28 வயதே நிரம்பிய இளையவர். 30 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த தன் தந்தைக்காகவே தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார் அஞ்சுகம். “என் தந்தை நடராஜன் பதவி சுகமோ, பணமோ எதையும் கட்சியால் அனுபவிக்காதவர். ஆகவே தான் சாதாரணமானவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில் தலைவர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்” என்கிறார். திராவிடர் கழகத்தோடு தொடர்பில் இருந்த அஞ்சுகத்தின் தந்தை நடராஜனின் நினைவாக தஞ்சையில் ஒரு நூலகம் செயல்பட்டு வருகிறது. தான் படித்த மருத்துவப் படிப்பும் கூட கட்சியினால்தான் கிடைத்தது என்கிறார் அஞ்சுகம். மிக எளிமையாகப் பேசும் அஞ்சுகம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்கிறார். அஞ்சுகத்தின் சொந்த ஊரான கன்னந்தங்குடிதான் எல்.கணேசன், சி.மகேந்திரன் போன்றோரின் சொந்த ஊர். அருகில் உள்ள ஒரத்தநாடு திராவிடர் கழகத்தின் கோட்டை எனலாம். ஆகவே பெரியாரிய சாயல் படிந்த குடும்பமாகவே அஞ்சுகத்தின் குடும்பம் இருந்திருக்கிறது.  அஞ்சுகத்திடம் ‘நீங்க பெரியாரிஸ்டா?’ என்று கேட்டால் ‘அவரில்லாமல் நாம் ஏது?’ என்கிறார். தஞ்சையில் திமுகவிற்கு இருக்கும் பாரம்பரிய செல்வாக்கும், அதிமுக ஆட்சி மீதான அதிருப்தியும் தனக்கு வெற்றி தேடித்தருமென திடமாக நம்புகிறார் அஞ்சுகம் பூபதி.

ஆர்.கே. நகர்(திமுக) :சிம்லா முத்துச்சோழன்

ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ள சிம்லா முத்துச் சோழனுக்கு இது பெரும் சோதனை. மக்கள் நலக்கூட்டணி சார்பாக கல்வியாளர் வசந்திதேவியும் களத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக திருநங்கை தேவி போட்டியிடுகிறார். சிம்லாவின் சிறப்பம்சம் எதையும் அநாயசமாகக் கையாள்வது. சிம்லா ஏதோ ஒரு குடும்ப விருந்தில் நடனமாடும் தனிப்பட்ட புகைப்படம் எப்படியோ அரசியல் எதிரிகளுக்குக் கிடைத்துவிட அதை வைத்துக்கொண்டு அதிமுகவும் மநகூவும் சமூக வலைத்தளங்களில் அவதூறு  பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதுகுறித்தெல்லாம் சிம்லா அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர் பாட்டுக்கு தொகுதிக்குள் பிரச்சாரத்துக்குச் செல்கிறார். ‘நிரந்தரம் நிரந்தரம்’ என்கிற கிறிஸ்தவப் பாடல் காலர் டியூனாக ஒலிக்க எப்போது அழைத்தாலும் அலைபேசியை எடுக்க முடியாதபடி பம்பரமாய் சுழல்கிறார். இவருடைய சொந்த ஊர் நாகர்கோவில். வழக்கறிஞர் அணியில் செயல்பட்ட இவர் தற்போது திமுக மகளிர் அணி கொள்கைப் பரப்புச் செயலாளராக உள்ளார். முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின்  மருமகளான இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். மதமறுப்பு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். பர்கூரில் சாதாரண சுதர்சனம் ஜெயலலிதாவை தோற்கடித்தது யாரும் எதிர்பாராமால் நடந்தது. சிம்லா இன்னொரு சுதர்சனமாக மாறுவாரா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வசந்திதேவியின் வருகை போட்டியை அதிகரித்துள்ளது!

திரு.வி.க நகர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) : பி. சுகந்தி

1991 -ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு 10 ஆண்டு காலமாக மாதர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக பணியாற்றியவர் பி.சுகந்தி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பள்ளி மாணவி சுபலெட்சுமி (1996) பாலியல் பலாத்கார படுகொலை வழக்கில் தொடர்ந்து போராடி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்தவர்.

“என் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள்.  90களில் எழுத்தறிவு இயக்கம் கிராமப் புறங்களில் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் அதில் என்னை இணைத்துக் கொண்டேன்.” என்கிற சுகந்தி தற்போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர். டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை தமிழகம் முழுவதிலும் நடத்தியதில் முக்கியப் பங்காற்றியவர்; மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்.

“சென்னையில் மழை வெள்ளத்தின்போது ஆளுங்கட்சியும் திமுகவினரும்  திருவிக நகர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.  நாங்கள் மக்களோடு மக்களாக நின்றோம். தோழர் மகேந்திரன் பத்தாண்டு காலம் எம்எல்ஏவாக இப்பகுதி மக்களுக்கு செய்த பணிகளை இன்னமும் நினைவு கூறுகிறார்கள். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்கிறார். சுகந்தியின் கணவர் கே. சாமுவேல்ராஜ் கட்சியில் மாநிலக்குழு உறுப்பினராகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.

மதுரை மேற்கு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உ.வாசுகி

மாதர் சங்க செயல்பாடுகள் மூலம் வாசுகி மக்களுக்கு பரிச்சயமானவர் உ.வாசுகி. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர். கடந்த 40 ஆண்டுகளாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கி வருகிறார். வங்கி ஊழியராகப் பணியாற்றிய இவர் 2000-ல் விருப்ப ஓய்வு பெற்று கடந்த 16 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார்.

“முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உமாநாத்தும் பாப்பா உமாநாத்தும் என் பெற்றோர். என் வீட்டுச் சூழலே மக்கள் பிரச்சினைகளைப் பேசும் களமாக இருந்தது. நான் வளரும் காலத்தில் தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் என்னை இடதுசாரி இயக்கத்தின் பக்கம் கொண்டுபோயின. கீழ்வெண்மணியில் 44 பெண்கள், குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற பல நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தேன். வன்முறையற்ற, முற்போக்கான, ஏற்றத் தாழ்வில்லா சமூகத்தைப் பார்க்கும் எண்ணம் எனக்குள் மேலோங்கியது. 19 -வது வயதில் மார்க்சிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.” என்கிற வாசுகி, பிரேமானந்தா, சிதம்பரம் பத்மினி போன்ற முறைகேடுகளை வெளிக்கொணர போராடியவர். கோகோ கோலாவை எதிர்த்து சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்.  பாலின சமத்துவம் குறித்த கருத்தியல் பரப்புரை, தலித் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் தலையீடு, ஊடக சித்தரிப்பில் பெண்கள் குறித்த ஆய்வு என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

பேராவூரணி (இந்திய கம்யூனிஸ்ட்) : தமயந்தி திருஞானம்

பேராவூரணி அருகே உள்ள ஆவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமயந்தி திருஞானம்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினராகவும் தஞ்சை மாவட்ட செயலாளராக உள்ள தமயந்தி, அரசியலுக்கு வந்த கதை சுவாரஸ்யமாக இருக்கிறது.

“1986ல எனக்கு கல்யாணம் ஆச்சி, கல்யாணம் ஆகி ஒரு வாரத்துல என்னை என் கணவர் மாதர் சங்கத்துல சேர்த்திவிட்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் மாதர் சங்க தலைவரா இருந்த மீனாட்சி சுந்தரம்மாள்கிட்ட, என் கையைப் புடுச்சி, இதோ மாதர் சங்கத்துக்கு ஒரு ஆள் சேர்த்துட்டேன்னு சொன்னார் என் கணவர். கல்யாணத்துக்கு முன்பே, என்னை கல்யாணம் பண்ணா கொடிபுடிக்கணும், மக்கள் போராட்டங்கள்ல கலந்துக்கணும் சரியான்னு கேட்டார். இப்படித்தான் ஆரம்பமாச்சு என்னோட அரசியல் வாழ்க்கை” என்கிற தமயந்தி, மாதர் சங்கத்தில் படிப்படியாக உயந்து தஞ்சை மாவட்ட தலைவராக இருக்கிறார். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்.

“எங்க தொகுதியில் குளம் ஒன்னை தூர் வாரி மேம்படுத்தறதுக்காக அரசாங்கம் ரூ. 30 லட்சத்தை ஒதுக்குச்சி, அதுல ஒன்றரை லட்சத்தை மட்டும் பயன்படுத்திக்கிட்டு மீதியை கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அதிமுகவினர் பகிர்ந்துக்கிட்டாங்க. நாங்க முன்னெடுத்து போராடியும் பயனில்லை. ஆனால் அதை மக்கள் மறக்கவில்லை. அவர்களுக்கு இந்தத் தேர்தல் தகுந்த தண்டனை தரும்” என்கிற தமயந்தி, 1996 முதல் 2006 ஆண்டு வரை ஆவணம் பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக  பத்தாண்டு காலம் பதவி வகித்தவர்.

கெங்கவல்லி (தேமுதிக) : ஆர்.சுபா

கெங்கவல்லி தொகுதியின் தற்போதைய எம்.எல். ஏ. ஆர். சுபா மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தன்னை, கேப்டன் தான் தமிழக அறியும் வகையில் எம் எல் ஏவாக்கியிருக்கிறார் என்று விஜயகாந்த் புகழ்பாடும் சுபா, அரசியலுக்கு வந்தது எப்படி?

“என் கணவர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் வைத்திருந்தவர். 1995-ஆம் ஆண்டு திருமணம் ஆன போது நானும் ரசிகர் மன்றத்தில் இணைந்து பணியாற்றினேன். 2005- ல் கேப்டன் கட்சி ஆரம்பித்தபோது தேமுதிகவில் இணைந்துகொண்டோம். 2006-ஆம் ஆண்டு கவுன்சிலர் தேர்தலில் நின்று ஆறாயிரம் ஓட்டுகள் வாங்கினேன். அது தோல்விதான் என்றாலும் என் அரசியல் வாழ்க்கை அப்போது முதல் ஏற்றம் கண்டது” என்கிற சுபா, எம் எல் ஏவாக தொகுதி மக்களுக்குச் செய்த பணிகளைப் பட்டியலிடுகிறார்.

“சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் கெங்கவல்லி தொகுதியை முதன்மைத் தொகுதியாக மாற்றியிருக்கிறேன். பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் அமர பெஞ்ச் வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன்; தேசிய நெடுஞ்

சாலையிலும் உள்புற சாலைகளிலும் 20 இடங்களில் நிழற்குடை அமைத்திருக்கிறேன். முதல் வருட நிதியில் மருத்துமனைகளுக்கு கட்டில்கள் வாங்கித் தந்தேன். இப்படி மக்களின் தேவைகளை தேடித் தேடி நிறைவேற்றியிருக்கிறேன்” என்கிறார்.  மீண்டும் ஒரு முறை வாய்ப்பளித்தால் விடுபட்ட அத்தனை விஷயங்களையும் மக்களுக்காகச் செய்வேன் என்கிற சுபா, கடவுளும் தொகுதி மக்களும் நினைத்தால் தான் மீண்டும் எம் எல் ஏ ஆவேன் என்கிறார்.

செய்யூர் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) : எழில் கரோலின்

 செய்யூரின் பிரபலம் எழில் கரோலின். வழக்கறிஞர், சமூக சேவகர்  என்பதையும் சேர்ந்து பிரபலத்துக்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது, அது முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் என்பது.

“என் அப்பா அரசியல் பிரபலம் என்பது மட்டுமல்ல, சமூகத்தின் மேல் உள்ள அக்கறையும் ஒரு காரணம். இந்த சமூக சாதி கட்டமைப்பை உடைக்க வேண்டும்,

சாதியில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதில் இருந்தே எனக்குள் இருந்தது. கல்லூரி நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மேல் கவனம் திரும்பியது. கணவனால் கைவிட்டப்பட்ட பெண்கள் குறித்து ஆய்வு செய்தேன். பெண் விடுதலை பேச்சளவில் மட்டுமே உள்ளதை புரிந்துகொள்ள முடிந்தது. அரசியல் அதிகாரத்தால் மட்டும்தான் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என தீர்மானித்தேன்” என்று அரசியல் பிரவேசத்துக்கான அழுத்தமான காரணத்தைச் சொல்கிறார் கரோலின். தொண்டு நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்துவருகிறார்.

“சாதி ஒழிப்பே சமூக நீதியை நிலைநாட்டும் என கொள்கையுடைய கட்சி விசிக. அதனால்தான் அதைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிற கரோலின், அதிமுக, திமுக வேட்பாளர்கள் தொகுதிக்கு அந்நியமானவர்கள், தான் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதாலும் தான் இதுவரை செய்துவந்த சமூகப் பணிகளுக்கு தனக்கு வெற்றியைத் தரும் என்று தீர்க்கமாகச் சொல்கிறார்.

தூத்துக்குடி (மதிமுக)  :பாத்திமா பாபு

மக்கள் நலக்கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் மதிமுக வேட்பாளராக  போட்டியிடுகிறார் பாத்திமா பாபு. பாத்திமா தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருக்கிறார்.

“நான் தன்னியல்பிலேயே போராட்ட குணம் கொண்டவள். ” என்கிற பாத்திமா பாபு,  ‘வீராங்கனை’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  இந்த அமைப்பின் மூலம் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.

“எனக்கு கட்சி அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆனால், போராட்டங்களில் எனக்குக் கிடைத்த பாடம், அரசியலும் ஒரு போராட்ட வடிவம்தான் என்பதே. 2011ல் தூத்துக்குடி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெல்ல முடியவில்லை. வெற்றி, தோல்வி என்று பார்ப்பதை விட, குரலற்றவர்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள்” என்று தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து பேசுகிறார் பாத்திமா. மீனவ சமூகத்தின் ஆதரவு இருப்பதால், அதிமுக-திமுகவுக்கு பலத்த போட்டியை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறார்.

பெரம்பலூர், (சமூக சமத்துவப் படை) : சிவகாமி ஐஏஎஸ்

எழுத்தாளர், சிறந்த அரசு அதிகாரி என சிறப்புகளுடன் அரசியல் களம் இறங்கியவர் சிவகாமி ஐஏஎஸ். அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலுக்கு வந்தவர். பகுஜன் சமாஜ் தமிழக பிரிவிக்கு தலைவராகவும் பின்பு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி சமூக சமத்துவப் படை என்ற தனிக்கட்சியையும் தொடங்கியவர்.

“அரசு அதிகாரியாக மக்களுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மக்களுக்கு  கூடுதலாக அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசியல் சிறந்த வழி என்று  தேர்ந்தெடுத்தேன். எட்டு ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறேன்” என்று அரசியல் நுழைவுக்காக காரணத்தைச் சொல்லும் சிவகாமி, தற்போது திமுக கூட்டணியில் தன் கட்சியின் சார்பாக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 “பெரம்பலூர் எனக்கு சொந்த ஊர். உறவினர், பள்ளி தோழிகள், ஆரம்பப் பள்ளி தோழிகள், கல்லூரி தோழிகள், எங்களுடைய பெரிய குடும்பம் அதனுடன் தொடர்புடையவர்கள், அதோடு இந்தத் தொகுதியில் திமுக வலுவாக இருக்கிறது. இதை பாஸிட்டிவ்வாக எடுத்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறேன்” என்று தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து பேசினார் சிவகாமி.

கவுண்டம்பாளையம் (நாம் தமிழர் கட்சி) : பொன்.கவுசல்யா

கோவை மாவட்ட இலக்கிய மேடைகளில் பரிச்சயமானவர் பொன். கவுசல்யா. எழுத்தாளர், பேராசிரியர். சீமானின் தமிழ் உணர்வால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்ததாகச் சொல்கிறார்.

“அடிப்படையில் நான் ஒரு தமிழ் உணர்வாளர். தமிழ் மண்சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவள். அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்ததில்லை. மக்கள் பணிகளையும் அரசியலையும் பிரித்து பார்த்ததில்லை. இலக்கிய அமைப்புகள் மூலமாக உழவாரப் பணி, கல்வி உதவிகளை அவ்வவ்போது செய்து வந்திருக்கிறேன். தமிழ் உணர்வாளராக சீமானின் கருத்துகளுடன் ஒத்துப்போனேன். தமிழ் இனத்துக்கான எழுச்சிக்காக பெண்கள் செயல்பட வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை சீமான் ஆரம்பித்தபோது அதில் என்னை இணைத்துக் கொண்டேன்” என்கிறார்.

தனது வெற்றி வாய்ப்பு குறித்து உற்சாகமாகப் பேசிய பொன். கவுசல்யா, “இப்போதுதான் விதை போட்டிருக்கிறோம். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். மாணவர்கள் புரட்சிநோக்கோடு களமிறங்கியிருக்கிறார்கள். தங்களைவிட மேலானவராக பார்க்காமல் தங்கள் வீட்டு அம்மாவாக, அக்காவாக, சகோதரியாக என்னைப் பார்க்கிறார்கள். சீமானின் நாம் தமிழர் கட்சியை எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அமைதியான ஒரு புரட்சி நடப்பதற்கான சாத்தியக் கூறு இருக்கிறது. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்”.

சிவகாசி (பாமக)  : திலகபாமா

பாட்டாளி மக்கள் கட்சியின் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டு எழுத்தாளர் திலகபாமாவின் பெயர் அறிவிக்கப்பட்டது பலருடைய புருவத்தை உயர்த்தியது. சமூக அக்கறையுடன் பல போராட்டங்களில் களச் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டும் திலகபாமா தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

“எழுத்தாளராக, சமூக அக்கறையுடன் சமூகத்தின் மீது விமர்சனம் வைக்கிறோம். சமூகம் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என கனவு காண்கிறோம், கற்பனையோடு வாழ்கிறோம். அதை சாத்தியப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்துவதே சிறப்பானது. பதவி கிடைக்குமா என்பதற்காகவெல்லாம், இந்த பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. மற்ற பெண்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான செயல்பாடு உள்ளவராக இருக்கிறீர்கள், நீங்கள் இந்த வாய்ப்பை ஏற்கவேண்டும் என்று சொல்லும்போது அதற்கு மரியாதை செய்ய வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது வேலை செய்யாமல் இருக்க முடியாது” என்று தேர்தலில் பங்கெடுப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் திலகபாமா. தான் பாமக சார்பில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இலக்கிய உலகில் எழுந்த சில விமர்சன குரல்களை நேர்மறையாகப் பார்க்கிறார் திலகபாமா. “அது அவர்களுடைய உரிமை. எங்கு அதிகமாக பணியாற்ற வேண்டியிருக்கிறதோ அங்குதான் நமக்கான வேலை இருக்கும். இந்த வாய்ப்பு  அதற்கானது” என்கிறார்.

பல்லாவரம் (அதிமுக)  : சிஆர். சரஸ்வதி

மக்களுக்கு நன்கு அறிமுகமான முகம் சி.ஆர். சரஸ்வதியுடையது.  திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருப்பதால் ஏற்கனவே பரிச்சயமானவர். அண்மைக்காலமாக அதிமுக சார்பாக தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்குகொண்டு மக்கள் அதிகம் பார்த்த முகங்களில் ஒன்றாக இவரது முகம் இருப்பதால் தன்னை அடையாளம் கண்டு பேசுகிறார்கள் என்கிறார் சரஸ்வதி. “இரட்டை இலை சின்னத்திற்கு எப்போதுமே மவுசு உண்டு. அத்தோடு எம்.ஜி.ஆர். தேர்தலில் நின்று வென்ற பரங்கிமலை பல்லாவரத்தில்தான் இப்போது வருகிறது. ஆகவே தொகுதி மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கிறது. நான் வெல்வது உறுதி” என்று நம்பிக்கையோடு பேசுகிறார் . இவர் தமிழக சமூக நல வாரியத்தின் தலைவரும்கூட.  அதிமுக அரசின் திட்டங்கள் மக்களிடையே போய்ச் சேர்ந்திருக்கிறதென்றும் அது மட்டுமே தன் வெற்றிக்கு வழிகோல போதுமானது என்கிறார். தான் வெல்வது மட்டுமல்லாமல் அதிமுக 215 இடங்களைப் பிடிக்கும் என திடமாக நம்புகிறார். மிக எளிமையாகப் பழகுவதும் அணுகுவதற்கு எளிதானவராக இருப்பது இவரது பலம். காலை 7 மணி முதல் முற்பகல் வரை பிரச்சாரம் செய்யும் இவர் மதியம் ஓய்வு எடுத்துக்கொள்கிறார். மாலை 4 மணிக்கு மீண்டும் பிரச்சாரத்திற்குச் செல்லும் இவர் மதிய ஓய்வுக்கான காரணத்தை விளக்கும்போது “இந்த வேகாத வெயிலில் நாம ஓட்டு கேட்க மக்களை கஷ்டப்படுத்தவேண்டாமே என்றுதான் மதியம்  பிரச்சாரம் செய்வதில்லை” என்கிறார்.

சங்கரன் கோயில்(அதிமுக) : ராஜலட்சுமி

ராஜலட்சுமி சங்கரன்கோயில் நகராட்சி தலைவராக இருக்கிறார். இவருடைய பெற்றோர், கணவர் என அனைவருமே அதிமுகவில் இருக்கிறார்கள். கணவர் அதிமுக இளைஞர் பாசறையில் நகரப் பொருளாளர். ராஜலட்சுமி நகர கழக இணைச் செயலாளராகவும் இருக்கிறார். இதற்கு முன்பு இளம்பெண்கள் பாசறையின் செயலாளராகவும் இருந்திருக்கிறார். நகராட்சித் தலைவராக சங்கரன் கோவிலின் 30 வார்டுகளுக்கும் கட்சிப் பாகுபாடின்றி பணிகளை நிறைவேற்றியிருப்பதாகவும் அதனால் நற்பெயர் இருப்பதாகவும் சொல்கிறது ராஜலட்சுமி தரப்பு. சாலை வசதி, மேலதிகாரிகளிடம் பேசி குடிநீர்த் தொட்டிகள் கட்டித்தந்தது, கழிவுநீர் வசதி செய்து தந்தது என அனைத்தும் தனக்கு வாக்குகளாக மாறும் என்கிறார் ராஜலட்சுமி. இவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் திமுகவின் அன்புமணி ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். அதற்கு அவர் மீதான அதிருப்தியே காரணம் என்று சொல்லும் ராஜலட்சுமி தரப்பினர் இந்தத் தேர்தலிலும் அந்த அதிருப்தியே ராஜலட்சுமியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கின்றனர். எம்.எஸ்சி. பி.எட். படித்திருக்கும் ராஜலட்சுமி பிரச்சாரத்திற்குச் செல்கையில் அதிமுக அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருப்பதைக் கண்டுகொள்ள முடிவதாகக் குறிப்பிடுகிறார்.  ஆளுங்கட்சி மீதான அதிருப்தியால் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்று கேட்டால் “அம்மா அதைச் செஞ்சாங்க, இதைச் செஞ்சாங்க” என்றுதான் மக்கள் பெருமையாகச் சொல்கிறார்கள். அதிருப்தி எல்லாம் இல்லவே இல்லை” என்று அடித்துச் சொல்கிறார்கள்.

முதுகுளத்தூர்(அதிமுக) : கீர்த்திகா முனியசாமி

பரமக்குடி நகர்மன்றத் தலைவராக 2006 முதல் இப்போது வரை இருந்து வரும் கீர்த்திகா முனியசாமி தன் முதல் ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இருந்தபோது நகர்மன்றப் பொறுப்பில் இருந்திருக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் நகர்மன்றத் தலைவராக தன்னால் இயன்றதை சிறப்பான முறையில் பரமக்குடிக்கு செய்து தந்ததாகச் சொல்கிறார் கீர்த்திகா. குடும்பமே அதிமுகவில்தான் இருக்கிறது. கணவர் முனியசாமி மாவட்டச் செயலாளராக இரண்டு முறை இருந்தவர். தற்போது மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர். நகர்மன்றத் தலைவராகவே இரண்டு முறை இருந்ததால் கட்சிப்பதவி எதையும் கீர்த்திகா வகிக்கவில்லை. பாழடைந்து கிடந்த பரமக்குடி நகராட்சி அலுவலகத்தை தனியார் தகவல்தொழில்நுட்பத் துறை அலுவலகம் போன்று மாற்றியதை தன் சாதனையாகச் சொல்கிறார் கீர்த்திகா. ஊழல், கையூட்டு போன்ற விஷயங்களுக்கு தன் அலுவலகத்தில் இடமில்லை என்கிறார். கட்சிப் பாகுபாடின்றி எல்லா வார்டுகளிலும் உள்ள மக்களை சந்தித்ததும், சாலை வசதிகளை நகராட்சி நிதியில் போட்டதும், பரமக்குடி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஆகாமல் இருக்க ஆற்றங்கரை சாலை என்கிற புது சாலையை அமைத்தது என தன் பணிகளை தொடர்ந்து கவனித்து வரும் மக்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாகவும் கூறுகிறார் கீர்த்திகா. “என் வெற்றிவாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது” என்று கூறும் கீர்த்திகா எம்.ஏ.(பொலிடிகல் சயன்ஸ்) படித்திருக்கிறார்.

கீழ்வைத்தியணான்குப்பம் (திமுக) : அமலு

அமலு விஜயன் - சாதாரண கூலி தொழிலாளிகள்தான் இவரது பெற்றோர். கணவரும் கணவருடைய குடும்பமும் திமுகவில் எண்பதுகளிலிருந்து பல ஆண்டு காலம் கட்சிப்பணி ஆற்றியவர்கள். 2002ல் இருந்து அமலு திமுகவில் இருக்கிறார். குடியாத்தம் தீவூரில் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் நின்று 52 வாக்குகளில் தோற்றார். வடக்கு ஒன்றியத்தின் மகளிர் அணி அமைப்பாளராகவும் இருக்கிறார். தனித்தொகுதியான கீழ்வைத்தியணான்குப்பம் சுருக்கமாக கே.வி.குப்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதை ஏற்றுக்கொள்ளாமல், இங்கு முன்பு திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற சீதாராமன் தலைமையில் வேட்பாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனால் தற்போது அமலு தரப்பிலிருந்து சீதாராமனை அழைத்துப் பேசி சமாதானம் செய்திருக்கிறார்கள். ஆகவே சுறுசுறுப்பாக பிரச்சாரத்திற்குக் கிளம்பி விடுகிறார் அமலு. பிரச்சாரத்திற்கு இடையூறாக இருக்குமென்பதால் செல்போனைக்கூட எடுத்துச் செல்வதில்லை. செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆதரவு அதிகமிருப்பதாகச் சொல்கிறது அமலு தரப்பு. இந்த அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டுமென மக்கள் விரும்புவதைக் காண முடிவதாகக் கூறுகிறார் அமலு.

வாணியம்பாடி (அதிமுக) :நிலோஃபர் கஃபீல்

நிலோஃபர் கஃபீல்- வாணியம்பாடியின் அதிமுக வேட்பாளர். இஸ்லாமியர்கள் நிரம்பிய பகுதி என்பதால் நிலோஃபர் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். மருத்துவரான இவர் வாணியம்பாடியின் நகர்மன்றத் தலைவர். இவர் நகர்மன்றத் தலைவராக செயல்படும் காலத்தில்தான் வாணியம்பாடியின் புதிய பேருந்து நிலையம் திறக்க எதிர்ப்பு ஏற்பட்டது.  ஊருக்கு வெளியே கட்டப்பட்டிருந்ததால் பயணிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி இப்பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு இயக்கம் உருவானது. பேருந்து நிலையத்தைத் திறக்க வேண்டுமென திமுக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்றபோது அதிமுகவினர் புரிந்த எதிர்வினைகள் சர்ச்சைக் குள்ளாகின. இணைய தளங்களில் நிலோஃபரின் எதிர்வினை வீடியோ பரவலாக சர்ச்சைக்குள்ளானது.

இதையெல்லாம் மீறி நிலோஃபர் வெல்வாரா என்பதை மே 19 அன்று தெரிந்துகொள்ளலாம். “அம்மாவின்  நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. மக்களை சந்திக்கையில் அவர்கள் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதையே விரும்புகிறார்கள் என உணர முடிகிறது. நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்று நம்பிக்கையோடு பேசுகிறார் நிலோஃபர் கஃபீல்.

கும்பகோணம் (அதிமுக) : ரத்னா சேகர்

கும்பகோணத்தில் எப்போதும் நிறுத்தப்படும் அதிமுகவின் ராம.ராமநாதனே ஆரம்பத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  பின் அவருக்கு பதிலாக ரத்னாவை வேட்பாளராக்கியிருக்கிறார் ஜெயலலிதா. ரத்னா 1980இல் இருந்து கட்சியில் இருக்கிறார். 2011 முதல் கும்பகோணம் நகர்மன்றத் தலைவராக இருக்கிறார். தொகுதிக்குள் நல்ல அறிமுகம் உண்டு. “எப்போதுமே அம்மாவின் ஆட்சியில்தான் மகாமகம் வருகிறது. இந்த முறை ஒரு சிறு சுகாதாரக் கேடும் இல்லாமல் அத்தனை பேர் கூடும் கூட்டத்தை திறம்பட நிர்வகித்தேன். அதுதான் நான் வேட்பாளராகக் காரணம்‘ என்கிறார்.  2013-14 ல் இவருடைய காலத்தில் தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான விருதையும் ரூபாய் 15 லட்சத்தையும் முதல்வர் கையால் பெற்றதை பெருமையாக எண்ணுவதாகச் சொல்கிறார் ரத்னா. கும்பகோணம் நகராட்சியின் முதல் பெண் நகர்மன்றத் தலைவரும் இவரே.

இவரை எதிர்த்து திமுகவின் இப்போதைய எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் களத்தில் இருக்கிறார். “அம்மாவின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருக்கின்றன.  மக்கள் சந்தோஷமாக அம்மா ஆட்சியில் இருக்கிறார்கள். ஆகவே வெல்வது உறுதி. நாடாளுமன்றத் தேர்தலில் வென்றது போல சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவே வெல்லும். அம்மாவே நிரந்தர முதல்வர்” என்கிறார் ரத்னா. இருந்தாலும் கடுமையான போட்டியைச் சந்திகிறார் இவர்.

ஸ்ரீவைகுண்டம்(காங்கிரஸ்) ;ராணி வெங்கடேசன்

காமராஜரின் எளிமையைப் பார்த்துதான் அரசியலுக்கு வந்தேன் என்கிறார் ராணி வெங்கடேசன், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ. இவரது கணவர் வெங்கடேசன் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். மகளும் ஐஏஎஸ் அதிகாரி. மருமகன் ஐபிஎஸ் அதிகாரி. ஈவிகேஸ் இளங்கோவனின் ஆதரவாளராகக் கருதப்படும் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தொகுதியில் எதிர்ப்புகளும் எழுந்தன.

“எங்கள் குடும்பம் அரசியல் பின்னணி இல்லாத குடும்பம். காங்கிரஸின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு இணைந்தவள் நான். 10 வருடங்களுக்கு முன்பு மகிளா காங்கிரஸில் இருந்தேன்” என்று தான் கடந்து வந்த அரசியல் பாதையைச் சொல்லும் ராணி வெங்கடேசன், தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து சொல்கிறார். ஏற்கெனவே சாத்தான்குளம் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக 2006-ல் வெற்றிபெற்றவர் இவர். இப்போது அந்த தொகுதி மறுசீரப்பில் காணாமல்போய் ஸ்ரீவைகுண்டமாக மாறி உள்ளது. “எம்எல் ஏவாக நான் செய்த பல விஷயங்களை மக்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். நான் போட்ட சாலைதான் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது. அதோடு தோழமைக் கட்சியான திமுக தொண்டர்கள் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று வெறியோடு செயல்படுகிறார்கள். தேர்தல் அறிக்கையில் உள்ள மது ஒழிப்பு, கல்விக்கடன் ரத்து போன்ற நல்ல விஷயங்களும் எனது வெற்றிக்கு கை கொடுக்கும்” என்கிறார் இவர்.

தொகுப்பு: கவின்மலர், மு.வி. நந்தினி

மே, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com